இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா மீது நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்காக இங்கிலாந்து அரசு எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இதனால், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை அக்டோபர் 15-ம் தேதிக்கு முன்கூட்டியே நடத்த போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானம் வெற்றி பெற 434 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 293 பேர் மட்டுமே ஆதரவு அளித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Discussion about this post