இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத வாகன விற்பனை விவரம் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் வாகன விற்பனை தொடர்ந்து 10ஆவது மாதமாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆசியாவின் மூன்றாவது பெரிய தொழில் துறையாக வாகன உற்பத்தித்துறையே உள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் வாகன உற்பத்தி சார்ந்த துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக நாட்டின் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகின்றது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத வாகன விற்பனை விவரம் இந்திய வாகன உற்பத்தி சங்கமான சியாமினால் இன்று வெளியிடப்பட்டது. அதன் தரவுகளின்படி, கடந்த 2018ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தோடு ஒப்பிடும் போது, கடந்த ஆகஸ்டில் வாகன விற்பனை 31.57% குறைந்து உள்ளது.
கார் விற்பனை கடந்த ஆண்டைவிட 41% குறைந்துள்ளது, இரு சக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 22% குறைந்துள்ளது. இவை தவிர வர்த்தகப் பயன்பாட்டிற்காக வாங்கும் வாகனங்களின் எண்ணிகையும் 38.71% குறைந்து உள்ளது. ஒட்டு மொத்தத்தில், கடந்த 2018 ஆகஸ்டில் நாடெங்கும் 2 லட்சத்து 87 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டு உள்ளன.
மக்கள் மின்சாரத்தில் இயங்கும் புதிய ரக வாகனங்களின் வருகையை எதிர்பார்ப்பதனாலும், அமெரிக்க சீன வர்த்தகப் போரால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்படும் சரிவுகளின் எதிரொலியாலும், சர்வதேச அளவில் உணரப்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியாலும் இந்திய மக்களின் வாகனங்கள் மீதான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது.
Discussion about this post