பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை பற்றி அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் ஏற்று நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 110விதியின் கீழ் பேரறிவான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலிலதா முடிவு செய்ததாக தெரிவித்தார். அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் ஏற்று நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
7 பேரின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் ஒன்றுபட்ட முடிவு இல்லை என அவர் தெரிவித்தார். மத்தியில் ஒரு முடிவும், மாநிலத்தில் ஒரு முடிவுமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அகில இந்திய காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கூறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அன்றைய கூட்டணியான திமுக மற்றும் காங்கிரஸ் நினைத்திருந்தால், ஒன்றரை லட்சம் பேரின் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என குறிப்பிட்ட அவர், அதை என் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்திய ரூபாய் மதிப்பிழப்புதான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை தளர்த்திவிட்டு, மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
Discussion about this post