உணவு டெலிவரி வர்த்தகத்தில், இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் விரைவில் களமிறங்க உள்ளது. தங்களுக்குப் பிடித்த உணவகத்தில் இருந்து, விருப்பமான உணவை மொபைல் ஆப்கள் மூலம் வாங்கும் வழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த சேவையில் பல நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு உணவை ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த மாதம் இந்தியாவின் உணவு டெலிவரி வர்த்தகத்தில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கவும், மக்கள் பல புதிய சலுகைகளைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில், உணவு டெலிவரி வர்த்தகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டே அமேசான் நிறுவனம் கால்பதித்தது. ஆனால், இலக்கை அடைய முடியாததால், அந்த வர்த்தகப் பிரிவு கடந்த ஜூன் மாதத்தில் மூடப்பட்டது. பின்னர், உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஈடுபட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் அமேசான் முதலீடு செய்தது.
இந்தியாவில் உள்ள பல ஆன்லைன் உணவு நிறுவனங்கள் சமீப காலங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருவதால், தற்போது, புதிய நிறுவனம் தொடங்கப்பட சிறந்த காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தின் பாடங்களையும், நிகழ்காலத்தின் தேவைகளையும் மனதில் கொண்டே அமேசானின் இரண்டாம் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே, தங்களுக்கு என தனி இடத்தை பெற்று விட்ட, இந்திய ஆன்லைன் நிறுவனங்களை, அமேசான் உடைக்குமா? அல்லது மிஞ்சுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Discussion about this post