மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பின. இதையடுத்து கர்நாடக அணைகளிலிருந்து முழு உபரி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச உயரமான 120 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.726 டி.எம்.சி யாக உள்ளது. இந்நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவிரியில் அதிகளவு நீர் திறந்து விடப்படுவதை அடுத்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காவிரி கரையோர மக்கள் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என தண்டோர மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. நெருஞ்சிப்பேட்டை – பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து நடைபெற்று வந்த படகுப் போக்குவரத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து குறைந்த பின் படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post