சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியில் நாளை அதிகாலை தரையிறங்குகிறது.
நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22ல் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பூமியை சுற்றி வந்த விண்கலம் அதன்பின் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நுழைந்த சந்திரயான்-2 விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
கடந்த 2 ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நிலவை வலம் வந்தது. இந்நிலையில் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை ஒன்றரை மணியிலிருந்து இரண்டரை மணிக்குள் தரையிறக்கப்படவுள்ளது. ஆயிரத்து 471 கிலோ எடையுடன் நிலவைச் சுற்றிவரும் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையிறக்கப்படும்.
லேண்டர் தரையிரங்கி சுமார் 4 மணி நேரம் கழித்து அதிலிருந்து ரோவர் பிரக்யான் வெளிவரும். நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் வரை ஊர்ந்து செல்லவுள்ள ரோவர், கனிம வளங்கள், நிலவில் ஏற்படும் அதிர்வுகள் குறித்து ஆய்வில் ஈடுபட உள்ளது. லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும்.
இதேபோல் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் சுமார் ஒரு வருடம் செயல்பட்டு நிலவின் மேற்பரப்பு மற்றும் நில அமைப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளும்.
இதனிடையே நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-2 தரையிறங்குவதை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிடுகிறார். பிரதமருடன் பள்ளி மாணவ, மாணவிகள் 60 பேர் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை பார்வையிடுகின்றனர். இதற்காக பெங்களூரு இஸ்ரோ மையத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் வெற்றிகரமாக இறக்கப்படும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தில் களமிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
Discussion about this post