4 மாதமாக தண்ணி காட்டிய தூக்கு தண்டனை கைதியை, சேலத்தில் வைத்து, கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.
மேட்டூர் அருகே உள்ள கண்ணாமூச்சி பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன். கடந்த 2015 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஹலேகிராமத்தில் கரும்புத்தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்த பொண்களை தன்னுடைய இச்சைக்கு இணங்க வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அவர்கள் இவரது ஆசைக்கு இனங்காததால் தூங்கிக்கொண்டிருந்த போது இரு பெண்கள் உட்பட 5 பேரை வெட்டி கொலை செய்தார்.
இது குறித்து கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கர்நாடக நீதிமன்றம் முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி சிறையிலிருந்து தப்பினார். தனது மனைவி, மகனை பார்க்க சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி ஊராட்சிக்கு வரலாம் என்பதால் கர்நாடக காவலர்கள் சில நாட்கள் முகாமிட்டு கண்காணித்தனர். ஆனால் முருகேசன் அகப்படவில்லை. கொளத்தூர் காவல்துறையினரும், தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கண்ணாமூச்சி வந்த முருகேசனை தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். நேற்று இரவு மேட்டூர் வந்த கர்நாடக சிறைத்துறை ஐஜி ரேவன்னா தலைமையில் வந்த கர்நாடக கால்துறையினர் முருகேசனை கைது செய்து பெல்காம் சிறைக்கு அழைத்து சென்றனர். 5 பேரை கொன்றவரை பிடித்த கொளத்தூர் காவலருக்கு சன்மானம் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும் ஐஜி ரேவன்னா தெரிவித்தார்.
Discussion about this post