வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம், தரவரிசை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும் எடுத்தனர். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து 299ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
Discussion about this post