சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற நவசக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுடன், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னை தியாகராயநகரில் உலர்ந்த பழங்களால் ஆன விநாயகர் சிலை பக்தர்கள் தரிசனத்திற்காக அமைக்கப்பட்டது. ஏராளமான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உலர் பழ விநாயகரை தரிசனம் செய்து சென்றனர். விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டது. மேலும் இன்று மதியம் புஜைக்கு பிறகு பொது மக்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடைபெற்றது. 13 ஆம் ஆண்டாக நடைபெறும் கண்காட்சியில், அத்திமரத்தால் செய்யப்பட்ட விநாயகர், இருசக்கர வாகனம் ஓட்டும் விநாயகர், சயன கோலத்தில் இருக்கும் விநாயகர் என பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
Discussion about this post