அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்விட்ஸர்லாந்தின் ஃபெடரர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டென்னிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் 3 ஆம் நிலை வீரரும் சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரருமான ரோஜர் ஃபெடரர், 15 ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தினார். 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கோஃபினை வீழ்த்திய ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பல்கேரியாவின் டிமிட்ரோவை சந்திக்க உள்ளார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் 8 நிலையில் உள்ள பிரபல அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், 22 ஆம் நிலை நிலை வீராங்கனையான குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா மார்டிக் அடித்த பந்தை நேர்த்தியாக எதிர் கொண்டு புள்ளிகளை எடுத்தார். ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற செரீனா காலிறுதியை உறுதி செய்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் தரவரிசையில் 2 ஆம் நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான அஷ்லி பர்டி, சீனாவின் கியாங் வாங்கை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் 22 நிமிடம் நீடித்த இப்போட்டியில் அஷ்லி 2-6, 4-6 என்ற செட் கணக்கில் வாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய வாங் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸை எதிர் கொள்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையரின் 4-வது சுற்று போட்டியில் 3 நிலையில் உள்ள செக் குடியரசின் பிரபல வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, இங்கிலாந்தின் ஜோன்னா கொண்டாவை எதிர் கொண்டார். ஆரம்பத்தில் புள்ளிகளை குவித்த பிளிஸ்கோவா 7-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட கொண்டா 6-3, 7-5, என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி பெண்கள் ஒற்றையரில் முதல் போட்டியாளராக காலிறுதிக்கு முன்னேறினார்.
Discussion about this post