அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 3 கோடியே 11 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில், அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்ட விரோதமாக குடியேறி வசிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதன்படி, அசாமை சேர்ந்தவர்களுக்கு தகுந்த சான்றிதழ்களை கொடுத்து, தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 41 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக, மறு பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. தகுதியான ஆவணங்கள் இல்லாததால் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post