அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் விபத்தில் சிக்கி காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ, நிவாரணத் தொகை பெறுவதற்குத் தகுந்த சான்றிதழ்களை இணைத்து அனுப்பும்படி பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவித் தொகை பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ தகுந்த நிவாரணத் தொகை மாணவரின் குடும்பத்திற்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சில தருணங்களில், நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கும் போது, தகுந்த இணைப்புகள் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதால், நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, இனி விண்ணப்பிக்கும் போது தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதம், முதல் தகவல் அறிக்கை, பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் விண்ணப்பம் என மொத்தம் 11 சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post