பசிபிக் பெருங்கடலில் 20 ஆயிரம் கால்பந்து மைதானங்கள் அளவுடைய பிரமாண்ட பாறைப் படலம் மிதந்து கொண்டிருக்கின்றது. பியூமிஸ் படலம் என்று அழைக்கப்படும் மிதக்கும் பாறைப் படலத்தின் பின்னுள்ள அறிவியல் என்ன?
கடலின் உள்ளே உள்ள எரிமலை வெடிக்கும்போது வாயுகள் நிறைந்த சூடான எரிமலைக் குழம்பு வெளிவரும், அது கடல்நீரால் உடனடியாகக் குளிர்விக்கப்படும் போது பாறைக் குழம்புடன் வாயு சேர்வதால் மிதக்கும் பாறைகள் உருவாகும். பளிங்கின் அளவு முதல் கால்பந்தின் அளவு வரையுள்ள இந்த மிதக்கும் பாறைகள் ‘பியூமிஸ் பாறைகள்’ – என்று அழைக்கப்படுகின்றன, இந்தியாவின் தனுஷ்கோடியில் இந்த மிதக்கும் பாறைகளை இன்றும் காணலாம்.
இந்த பியூமிஸ் பாறைகள் கோடிக் கணக்கில் உருவாகும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு ஒரு மிதக்கும் பாறைப் படலத்தை உருவாக்குகின்றன. இந்த மிதக்கும் பாறைப்படலமே பியூமிஸ் படலம் என்று அழைக்கப்படுகின்றது.
இப்படி ஒரு பியூமிஸ் படலம்தான் தற்போது பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னின் பரப்பளவு அல்லது மன்ஹாட்ட்ன் தீவின் பரப்பளவு அல்லது 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு இணையாக இதன் பரப்பளவு உள்ளதாக கடந்த 9ஆம் தேதி நாசா எடுத்த செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது எந்த ஒரு குறிப்பிட்ட எரிமலை வெடிப்பால் உருவானது என்று தெரியவில்லை.
பசிபிக் கடலில் நகரும் பியூமிஸ் படலம் குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் கடல் பயணிகள் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த பியூமிஸ் படம் ஆஸ்திரேலிய நாட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் 10 மாதங்களுக்குள் இந்தப் படலம் ஆஸ்திரேலியக் கடற்கரையை அடையும். ஆஸ்திரேலிய நாடு ஏற்கனவே பவளப் பாறைகளின் அழிவை எப்படிக் குறைப்பது என்று ஆய்வுகள் செய்துவரும் நிலையில், இந்தப் பியூமிஸ் படலம் அதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பியூமிஸ் படலம் கடலில் நெடுந்தூரம் பயணிக்கும் பறவைகளுக்கு இளைப்பாறும் இடமாக தற்போது உள்ளது. உலகில் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயர்ந்த பண்டைய மனிதர்கள், உயிரினங்கள் ஆகியவற்றிற்கு பியூமிஸ் உதவி இருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த மிக இளம் வயது மிதக்கும் பாறைகளின் நகர்வு உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களால் உற்றுநோக்கப்படுகிறது.
Discussion about this post