ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட பெடோர் என்கிற மனித ரோபோ, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவ மனித வடிவிலான பெடோர் என்று பெயரிடப்பட்ட ஸ்கைபாட் எஃப் 850 என்கிற ரோபோவை ரஷ்யா வடிவமைத்தது. இதனை சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மூலம் கஜகஸ்தானின் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா அனுப்பியது. இதையடுத்து, விண்கலத்தை திட்டமிட்டபடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பான தொலைவில் நிறுத்திய விஞ்ஞானிகள், ஒருநாள் தாமதத்திற்கு பிறகு வெற்றிகரமாக இணைத்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த இந்த மனித ரோபோ விரைவில் பணியைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post