சென்னையில் இன்று முதல் சோதனை முறையில் இயக்கப்பட உள்ள மின்சாரப் பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.
பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களுக்குப் பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களை நவீனமயமாக்கும் திட்டத்தில், வரும் ஆண்டுகளில் படிப்படியாக 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 மின்சாரப் பேருந்துகள் வாங்க ஜெர்மனி நிறுவனம் நிதியுதவி அளிக்க உள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதன் முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் இரண்டு பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டு புதிய மின்சாரப் பேருந்துகளில் ஒரு பேருந்து தயாராகி உள்ளது. இந்தப் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சோதனை முறையில் இயக்கப்பட உள்ள இந்தப் பேருந்தைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
Discussion about this post