திருச்சியில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் ஊழியர்களிடமிருந்து நூதன முறையில் 16 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர் காவல்துறையினரிடம் சிக்கினார்.
திருச்சியில் ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார நிறுவன ஊழியர்களிடமிருந்து கடந்த செவ்வாய்கிழமை 16 லட்ச ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு காமிரா காட்சிகள் உதவியுடன் கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியில் குடிபோதையில் ஆட்டோவில் ஏறிய நபர், தன்னை தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். விடுதியில் அறைகள் காலியாக இல்லாததால் மீண்டும் ஆட்டோவில் ஏறியவர் தன்னிடம் அதிகமான பணம் இருப்பதாகவும் தன்னை பாதுகாப்பான இடத்தில் இறக்கி விடும் படியும் தெரிவித்துள்ளார்.
அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் முருகையா அவரையும் பணத்தையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுபோதையில் இருந்த நபரின் பெயர் ஸ்டீபன் என்பதும், திருச்சி தனியார் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஸ்டீபனைக் கைது செய்த பெரம்பலூர் காவல்துறையினர் திருச்சி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஸ்டீபனிடமிருந்து சுமார் 13 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post