அமேசான் காட்டுத் தீ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பூமி விரைவில் வெப்பமயமாகி விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேசான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. புதிய அரசு அமைந்த பிறகு 4 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து தெரியவந்ததுள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9 ஆயிரத்து 500 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை தீயினால் பல்வேறு உயிரினங்கள் மற்றும் அரிய வகை மரங்கள் சாம்பலாகி உள்ளன. கடந்த ஆண்டு 40 ஆயிரம் முறை காட்டு தீ ஏற்பட்ட நிலையில், தற்போது 8 மாதங்களில் மட்டும் 74 ஆயிரம் முறை காட்டு தீ ஏற்பட்டுள்ளது. அமேசான் காடுகளை உலகின் நுரையிரல் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம் புவியில் கார்பன்டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் பிராண வாயு உற்பத்தியில் 20 சதவீத பங்கு வகிக்கிறது இந்த மழைக் காடு.
கடந்த மூன்று வாரமாக அமேசான் மழைக்காடு கொழுந்து விட்டு எரிகிறது. இதற்கு பெரும் பண்ணையாளர்களும், நிறுவனங்களும் தான் காரணம் என்றும் அவர்கள் பற்ற வைத்த நெருப்பினால் உண்டான கோபம் இன்னும் அமேசானில் அடங்கவில்லை என கூறுகின்றனர் பிரேசிலை சேர்ந்த பழங்குடியினர்கள்.
புவியின் நுரையீரல் அழிந்து வருகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். “pray for Amazon” என்ற ஹாஷ் டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ காட்டு தீ ஏற்பட என்.ஜி.ஓக்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். என்.ஜி.ஓக்களுக்கான நிதியை அரசு நிறுத்தியதிலிருந்து தான் காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறும் அதிபர். அது தொடர்பான ஆதரங்களை வெளியிடவில்லை.
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு ஆக்கிரமிப்பாளர்களையும், கார்ப்ரேட் நிறுவனங்களையும் அமேசானை நோக்கி இழுத்து கொண்டிருக்கிறது. அங்கு உருவாகியிருக்கும் அரசும் இதை தான் எதிர்பார்ப்பதாக பிரேசில் அதிபரின் பதிலில் இருந்து தெரிய வருகிறது.
ஒரு காடு அழிந்தால் அதை சார்ந்திருக்கும் நாடு அழியும். ஆனால் அமேசான் அழிந்தால் உலக அழிவையே விரைவு படுத்தும். ஏனென்றால் அமேசான் அது வெறும் மழைக்காடு மட்டும் மல்ல. உலகின் நுரையீரல் கால நிலை மாற்றத்தை எதிர்த்து போராட நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அமேசான்தான் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.
இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, அமேசான் காட்டு தீயினால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளது.
Discussion about this post