நவீன வசதியுடன் உருவாக்கபட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு உலை பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தபட்டது.
ரஷ்யாவில் நவீன வசதியுடன் உலகின் முதல் மிதக்கும் அணு உலை உருவாக்கப்பட்டுள்ளது. அகடெமிக் லோமோனோசோவ் (Akademik Lomonosov) என பெயரிடப்பட்டுள்ள இந்த அணு உலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்கு பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது.
ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான துறைமுக நகரம் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணு சக்தி வழங்கவே இந்த மிதக்கும் அணு உலை உருவாக்க பட்டுள்ளதாக ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனை செய்தியாளர்களுக்கு காண்பித்து பேட்டியளித்த, ரோசனெர்கோட்டம் (Rosenergoatom) உதவி இயக்குனர் டிமிட்ரி அலக்சீன்கோ, மிதக்கும் இந்த அணு உலையை கடல் வழியாக பல்வேறு இடங்களுக்கு நகர்த்தி, அணு ஆற்றல் தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம் என்றார். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா தயாரித்துள்ள இந்த மிதக்கும் அணு உலையை பலர் பாராட்டினாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு குருக்ஸ் நீர்மூழ்கி கப்பலில், அணு உலை இயங்கிய போது 118 பேர் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதனால் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ வாய்ப்பளிக்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Discussion about this post