காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2015-16ம் ஆண்டு வருமானவரிக் கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1 புள்ளி 18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில், 1 கோடியே 35 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக, வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை, எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு பதிவு செய்யும்போது மனுதாரர் எம்.பி.யாக இல்லை என்றும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வருமான வரி வழக்கை, அமர்வு நீதிமன்றமான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக தலைமைப் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவுக்கு ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
Discussion about this post