தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக நியூஸ் ஜெ இருக்கும் என முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, இணையதளம், மற்றும் செயலி தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவி ஜெயலலிதா அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பாலமாக நியூஸ் ஜெ இருக்கும் எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை. எல்லா கட்சிகளுக்கும் டிவி உள்ளது.
புரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும்.
புரட்சித் தலைவி ஆசியோடு அரசு செயல்படுத்தும் நல்ல பல திட்டங்களும், கட்சி நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் நியூஸ் ஜெ மூலம் வெளிவர இருக்கிறது. பல தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் நல்ல திட்டங்களை ஒரு முறைதான் காண்பிக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒரு குறை சொன்னால் அதை பல முறை காண்பிக்கிறார்கள். கஷ்டப்பட்டு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக காண்பிக்க நியூஸ் ஜெ உதவும். விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்கிறார்கள், அரசு எப்படி விறுவிறுப்பான செய்தி கொடுக்கும்?
புரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், தமிழக அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. வேளாண்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை, உயர்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை பல தேசிய விருதுகளை பெற்றுள்ளன. காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சாதனைகள் மூலம் கிடைத்த விருதுகள் பற்றிய செய்திகளை குறுகிய அளவில் காட்டுகிறார்கள். எனவே, சாதனைகளை அடிக்கடி ஒளிபரப்பி மக்கள் மனதில் பதியச் செய்ய நியூஸ் ஜெ உறுதுணையாக இருக்கும்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்பதை மற்ற தொலைக்காட்சிகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நியூஸ் ஜெ வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
Discussion about this post