முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகப் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புப் பணிக்கு மத்தியக் காவல் படையை நியமனம் செய்யவும், அணையில் 132 அடி முதல் 152 அடி வரை நீர் தேங்கும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், இது கேரள ஆக்கிரமிப்பு தொடர்பானது எனவும், மேலும் ஆக்கிரமிப்புகள் இருப்பது மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இது குறித்துக் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post