கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராகி 25 நாட்களுக்குப் பிறகு இன்று அவரது அமைச்சரவையில் 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்துக் குமாரசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜூலை 26ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மூன்றே நாட்களில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்தார். அமைச்சரவையில் யார் யாரைச் சேர்ப்பது என்பது குறித்து டெல்லிக்குச் சென்று பாஜக மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். அதையடுத்து 17 பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதற்கான பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வத் நாராயண், கோவிந்த் கர்ஜோல், ஈஸ்வரப்பா, முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார், அசோகா உள்ளிட்ட 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் வாஜுபாய்வாலா அவர்களுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post