ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். மகத்தான தருணங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். அப்படிபட்ட புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டில் எடுத்த சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. வியட்னாம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் உண்மை நிலையை உலகுக்கு உணர்த்தியது. 1972 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம். அமெரிக்கா வீசிய நேப்பாம் வெடிகுண்டினால் தீக்காயம் பட்ட சிறுமி, உடையின்றி பயத்தோடு நடந்துவரும் இந்தப் புகைப்படம், வியட்நாமில் பின்னர் போர் நிறுத்தம் ஏற்படக் காரணமாக இருந்தது.
1989 ஜூன் 5ஆம் தேதிம் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் நடந்த மக்கள் போராட்டம் சீன ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. அப்போது அணிவகுத்த பீரங்கிகளை ஒரு தனிமனிதன் எதிர்த்து நிற்கும் புகைப்படமே இது. உலகில் பலர் இந்தப் படத்தை தங்களின் உந்துசக்தியாகக் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இதுவரை புகைப்படத்தில் உள்ள அந்த நபரின் பெயர் தெரியவில்லை. இது 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில், 1993ஆம் ஆண்டில் கார்ட்டர் என்ற புகைப்படக் கலைஞரால் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அசையக் கூட சக்தி இல்லாத பெண் குழந்தையின் இறப்பை எதிர் நோக்கி ஒரு கழுகு காத்திருப்பதைக் காட்டும் இந்தப் புகைப்படம் உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலிட்சர் விருதும் பெற்றது. ஆனால், இந்தப் புகைப்படம் தொடர்பான மன அழுத்தங்களால் இதனை எடுத்த கார்ட்டர் 1994ல் தற்கொலை செய்து கொண்டார்.
அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவன், இறந்து கடற்கரையில் ஒதுங்கிய இந்தப் புகைப்படம் 2015ல் வெளியாகி சிரியப் போரின் கோர முகத்தை உலகுக்குக் காட்டியது. உலகெங்கும் அய்லானுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. அடுத்த சில நாட்களில் சிரிய அகதிகளுக்காக பொதுமக்கள் அளித்த நன்கொடைகள் 55 மடங்குக்கு அதிகரித்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புகைப்படம் 2013ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் அவர் உடலில் குண்டுகள் துளைத்து இறந்த புகைப்படமும் வெளியானது. இவை திமுக – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியால், எதிர்ப்பின்றி இலங்கையில் நடந்த பல்வேறு மனித உரிமை அத்துமீறல்களுக்கு மவுன சாட்சியாய் நின்றன.
Discussion about this post