நாடு முழுவதும் உள்ள ஆன்மிகவாதிகளை 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் சங்கமிக்க செய்த அத்திவரதர் இன்று மீண்டும் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் இந்த ஆண்டு நடைபெற்றது. வாழ்வில் காணக் கிடைக்காத அரிய பாக்கியம் இதுவென்பதால், காஸ்டு 1-ஆம் தேதி முதல்லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி பக்தியோடு படையெடுத்தனர். திசை எட்டும் இருந்து பக்தர்களை காந்தம் போல் ஈர்த்த அத்திவரதர், கடந்த 47 நாட்களாக அவர்களுக்கு தரிசனம் அளித்து அருள்பாலித்தார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு 1979ஆம் ஆண்டு அத்திவரதர் காட்சி தந்தபோது, சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்து தரிசித்து சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த முறை தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களும் அத்திவரதர் வைபவம் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டதால், அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 1979-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அத்திவரதரின் புகைப்படங்கள் கருப்பு-வெள்ளை நிறத்திலேயே இருந்தன. அதுவும் குறைந்த அளவு படங்களே எடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த முறை வண்ண.. வண்ண.. பட்டு ஆடையில் ஜொலித்த அத்திவரதரின் புகைப்படங்கள் சயன கோலத்திலும், நின்ற நிலையிலும் வெளியாகி விற்பனையிலும் சாதனை படைத்தன. 47 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை சேவித்துள்ளனர்.
தமிழக அரசு செய்து இருந்த அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்ததால், சிறிய நகரமான காஞ்சிபுரம், அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களை அன்புடன் வரவேற்றது. 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் பள்ளி கொள்கிறார். இனி, 2059ம் ஆண்டு தான் அத்திவரதரை தரசிக்க முடியும். நாடு முழுவதும் பக்தர்களை ஆட்கொண்ட அத்திவரதர் அவர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து இருப்பார், இந்த முறை அத்திவரதரை கண்டவர்கள், அடுத்த முறையும் அவரை தரிசிப்பதற்கான பாக்கியத்தை பெற வாழ்க்கையில் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த பாக்கியம் கிடைக்க அத்திவரதர் அருள்பாலிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
Discussion about this post