மேட்டூர் அணையில் இருந்து திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மூன்று லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மழைப்பொழிவு குறைந்ததால் வரத்து நீரின் அளவும் குறைந்தது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவைத்தார்.
நொடிக்குப் பத்தாயிரம் கன அடி நீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த நீரும் பவானி ஆற்றில் வரும் நீரும் இணைந்து நேற்றிரவு கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையை வந்தடைந்தது. இதனால் மாயனூர் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு நொடிக்குப் பத்தாயிரத்து எண்ணூறு கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்தது.
முக்கொம்புக்கு புதுவெள்ளம் வந்ததையொட்டி விவசாயிகள் நெல், பூ, பழம் ஆகியவற்றைப் படைத்துச் சிறப்பு பூசைகள் செய்தனர். அதன்பின் அணைக்கு வந்த வெள்ளத்தை மலர் தூவி வரவேற்றனர். காவிரியில் தண்ணீர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன்மூலம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாகத் தமிழகம் நெல் விளைச்சலில் சாதனை படைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் பிரிவில் 9 மதகுகள் உடைந்தன. இந்த மதகுகளைச் சீரமைக்கும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாக்குப்பிடிக்கும் வகையில் அணை மதகுகள் சீரமைக்கப்பட்டள்ளன. 95விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. முக்கொம்பு அணையின் அனைத்து மதகுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
முக்கொம்பு அணையின் அனைத்து மதகுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றிரவே கல்லணையை வந்தடையும். இதையடுத்துக் கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றில் டெல்டா பாசனத்துக்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்ககள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
Discussion about this post