சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக அம்மா பேட்ரோல் எனும் பெயரில் புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தனிப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்டந்தோறும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவின் தலைவராக ஏடிஜிபி ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என இளஞ்சிவப்பு நிற ரோந்து வாகனங்களை உருவாக்கியுள்ளனர். இதில் குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 1091 ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டமாகச் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களுக்கு 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ரோந்து வாகனங்களைக் காவல்நிலையங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post