கல்வி என்பது மனிதனுக்குள் பொக்கிஷங்களாய் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு மந்திரம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பரிணாம வளர்ச்சியில் கல்வி என்பது ஒரு முடிவடையாத அம்சமாய் உள்ளது.
குழந்தைகளுக்கான பள்ளிகளில் மான்டிசோரி பள்ளிகள் ஒரு வகை. 1907-ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் இம்முறை வகுக்கப்பட்டது. உலகில் பல நாடுகளில் மான்டிசோரி முறைப் பள்ளிகள் உள்ளன. இந்தியாவில் சில மாநிலங்களில் இக்கல்வி முறை பின்பற்றப்படுகிறது.
தமிழகத்திலும் கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சென்னையில் துவக்கப்பட்டது. படிப்படியாக 14 மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசொரி கல்வி முறை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான செலவினங்களை தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து மாணவர்களின் நலனில் அக்கறை செழுத்தி வருகின்றனர்.
விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற கொள்கையே இதன் அடிப்படையாகும். மான்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சுதந்திரம் உண்டு. பல குழந்தைகள் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையை இங்கு பெறுகின்றனர். மான்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவுமே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருப்பார்கள். கணிதம், பூகோளம், உயிரியல் முதலிய பல துறைகளுக்கேற்றவாறு பலவகைக் கருவிகள் இம்முறையில் உள்ளன. இப்பள்ளிகளில் பாட முறைகள் குழந்தைகளின் விளையாட்டுகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் தங்களது வீட்டில் தினமும் பார்க்கும் தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிணைதல் மற்றும் உருட்டுதல், காய்கறி வெட்டுதல் மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பல செயல்களை உள்ளடக்கியது. குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த பண்புடையவர்களாக சமூகத்தில் வளர ஏதுவாக இருக்கிறது. இதற்கு சென்னை மாநகராட்சி மான்டிசொரி பள்ளிகள் முன்னோடியாக திகழ்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலும் இக்கல்வி முறை செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post