மனிதனுக்கு எப்போதும் சலிக்காதவை மூன்று. ஒன்று கடல், மற்றொன்று ஓடும் ரயில், இன்னொன்று யானை. சர்வதேச யானைகள் தினமான இன்று, யானைகள் குறித்த சிறப்பு கட்டுரை…
கானகப் பேருயிர் என்ற சொல்லுக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்றால் யானைகள் தான். 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்த யானைகள் மெமோத்துகளின் பரிணாம வடிவம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
ஒரு விலங்குக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருப்பது இயல்பு. பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் இருப்பது விரிவு. 50க்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்தால் என்னவென்று சொல்வது?. யானைக்கு மட்டும் தமிழில் 60க்கும் மேற்பட்ட மாற்றுப் பெயர்கள் உள்ளன.
மேலும் யானைகளில் வகைகள் என்றால் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகை மட்டுமே பரவலாக தெரியும். இவற்றுக்குள்ளாக முரட்டுத்தனம் வாய்ந்த கும்கி, தந்தங்களற்ற மக்னா, ஆப்பிரிக்க சவானா, ஆப்பிரிக்க ஃபாரஸ்ட், நீண்ட தந்தங்கள் கொண்ட டஸ்கர்ஸ் என பல்வேறு சுவாரஸ்யமான பகுப்புகள் உண்டு. ஆனால், இவ்வளவு வேற்றுமைகளையும் கடந்து, எல்லா யானைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை காட்டை உருவாக்கும் திறன்தான்.
மனிதர்களுக்கு, யானை ஒரு காட்டுவிலங்கு என்பதில் இருக்கும் தெளிவு, காடு எதுவரை என்பதில் இருப்பதில்லை. ஒரு யானை தன் சராசரியான வாழ்நாளில் அதிகபட்சமாக ஒரு தனி காட்டையே உருவாக்க வல்லது. நாளொன்றுக்கு சுமார் 200 முதல் 250 கிலோ உணவு உண்னும் ஒரு யானை, 100 முதல் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த உணவின் 10% விதைகள் என்று எடுத்துக் கொண்டாலும், 25 கிலோ விதைகளில், 10 கிலோ அளவிலான விதைகள் விதைக்கப்படுகின்றன. அதாவது நாளொன்றுக்கு சுமார் 300 லிருந்து 500 மரங்கள் நடப்படுகின்றன. மாதம் 30 நாளில், குறைந்தபட்சம் மூவாயிரம் மரங்கள் வீதம் ஆண்டொன்றுக்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை யானைகள் நடுகின்றன. அந்தவகையில் காடுகளுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையுள்ளவையாகவும் யானைகளை பார்க்கலாம்.
ஆனால், மனித பேராசைக்காகவும், வணிக தேவைகளுக்காகவும் யானைகள் வேட்டையாடப்படுவது உலகெங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. உச்சகட்டமாக, மனித வேட்டையால் மனம் பதறிப்போன ஆப்பிரிக்க யானைகளின் வம்சாவழியில், இப்போதெல்லாம் எந்த யானைக்கும் தந்தங்கள் வளருவதில்லை என்பது, உலகத்துக்கு தவறான உயிர்ப் பல்லுருவாக்கத்தை உருவாக்கி விட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் வெட்கப்பட வேண்டிய செய்தியாகவே உள்ளது. வேதனையை பெருக்கும் செய்தியாகவே உள்ளது.
1979 முதல் 1989க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில், 50% ஆப்பிரிக்க யானைகள் தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டுள்ளன என்று ஆப்பிரிக்க காடுகளில் மேற்கொள்ளப்பட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சீனாவில் தந்தத்துக்கு வழங்கப்படும் அதிக விலையால் தந்தவேட்டை 2010 முதல் 2012 வரை மட்டும் தோராயமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. யானை தந்தம் கிலோ ஒன்றுக்கு இரண்டாயிரத்து 100 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை ஆவதாகவும் யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கவும், யானைகளுக்கான சர்வதேச பாதுகாப்பை ஊறுதி செய்யும் விதமாகவும், சர்வதேச யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை எல்லா உயிர்களுக்குமானது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே இந்த நாளில் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
Discussion about this post