கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, அலாமட்டி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால், பெலகாவி, பாகல்கோட்டை, ராய்ச்சூர், பீதர், குடகு, ஹாசன், தார்வார் உள்பட 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் பெருக்கெடுத்து பாயும் வெள்ள நீரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு, தீவுகளாய் காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர்.
Discussion about this post