12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டவை நீலக் குறிஞ்சி செடிகள். நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிஞ்சி மலர்களை மற்றவர்களுக்கு காண்பிக்க அவற்றை செடியோடு பலர் வெட்டிச் செல்கின்றனர். அபூர்வ வகை குறிஞ்சி செடிகள் வெட்டப்படுவது நீலகிரி மாவட்ட மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எனவே, வனத்துறையினர், உள்ளூர் மக்களை கொண்டு குறிஞ்சி செடிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. குறிஞ்சி மலர்கள் பூத்தவுடன் அவற்றில் இருந்து உதிரும் விதைகள் காட்டுக்கோழி உள்ளிட்ட பறவைகளால் மற்ற இடங்களுக்கும் பரவும். ஆனால், செடிகள் வேரோடு வெட்டி எடுக்கப்படுவதால், விதைப் பரவல் குறைந்து குறிஞ்சி செடிகள் முற்றிலுமாக அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post