காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சிவன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கபினி அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக அணையின் பாதுகாப்பை கருதி கர்நாடக அரசு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கபினி ஆற்றில் நீர் வரத்து அதிகமாகியுள்ளதால் ஊட்டி மைசூர் தேசிய நெடுஞ்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மைசூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் நஞ்சன் கூட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கபினி ஆற்றின் கரையோரங்களில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பாக மாற்று இடத்தில் தங்க வைக்க கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புகுழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
Discussion about this post