முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.
சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 2016ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுஷ்மா சுவராஜ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இரவு 9.35 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் வழியிலேயே உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து சுஷ்மா சுவராஜ் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
Discussion about this post