காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூடுதல் படைகளை அனுப்பி வைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காஷ்மீருக்கான சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து, மாநிலத்தை மூன்றாக பிரித்து யூனியன் பிரதேசங்களை அமைக்க மத்திய அரசு வியூகம் போன்ற தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி காரணமாக காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிவிரைவு படைகள் உட்பட கூடுதல் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செய்யலாளர் ராஜீவ் கவுப மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, எல்லை பகுதியில் உயிரிழந்த பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களை எடுத்து செல்ல இந்தியா அனுமதி வழங்கி உள்ளது. வெள்ளை கொடியுடன் வந்து பாகிஸ்தான் வீரர்களை உடல்களை எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post