திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுகவை சேர்ந்த நிர்வாகி சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் தாய் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கையை பாழாக்கிய ஆத்திரத்தில் உமா மகேஸ்வரியையும், அவரது கணவரை கொன்றதாக கார்த்திகேயன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி, சீனியம்மாளிடம் உமா மகேஸ்வரியும் அவரது கணவரும் 50 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. சொன்னபடி சீட் வாங்கி தராததால் கொடுத்த பணத்தை சீனியம்மாளும் அவரது மகன் கார்த்திகேயனும் திருப்பி கேட்டுள்ளனர். பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில், திமுக கட்சியை சேர்ந்தவரை சொந்த கட்சிக்காரரே திட்டம் போட்டு கொடூரமாக கொலை செய்தது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை, கொலை நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணை கொலை செய்தது எப்படி என்று கார்த்திகேயன் தத்ரூபமாக நடித்து காண்பித்தார். கொலை செய்த பின்னர் தடயங்களை அழித்ததையும், வழக்கை திசைத் திருப்ப நகைகளை திருடி சென்றதையும் அவர் நடித்து காட்டினார். இந்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கைதான கார்த்திகேயனின் தாயாரும், திமுக நிர்வாகியுமான சீனியம்மாள், அவரது கணவர் சன்னியாசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் மகளுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
Discussion about this post