ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா ராணுவம் அளித்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
ரஜெளரி மாவட்டத்திற்கு உட்பட்ட சுந்தர்பணி, கேரான் உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கிரிஷன் லால் என்ற வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் ராணுவ நிலைகளும் பலத்த சேதமடைந்தன. பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களில் 3வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதியான பயாஸ் பன்சோ உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தின் பிஜ்பெகரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
உயிரிழந்த பயாஸ் பன்சோ கடந்த ஜூன் 12 ஆம் தேதி துணை ராணுவப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 5 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post