விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், புதிய முயற்சியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மர விதைகளை உள்ளே வைத்து விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே பல வண்ணங்களில் பல்வேறு அளவிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படும். களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், வழிபாட்டுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலிலோ அல்லது நீர்நிலைகளிலோ கரைக்கப்படும். அவ்வாறு கரைக்கப்படும் சிலைகளில் வேதிப்பொருள் கலக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன் பாளையத்தில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் சொந்த தொகுதியான பவானியில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. களிமண், மரவள்ளிக்கிழங்கு மாவு, அட்டைக்கூழ் ஆகியவைகளில், மர விதைகளான ஆலம், புங்கன், வேம்பு விதைகளை வைத்து, விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது.
ரசாயனம் கலக்காத வாட்டர் கலர் கொண்டு, ஸ்பிரே பெயிண்டிங் மூலம் வண்ணம் தீட்டப்பட்டு, முழு விநாயகர் சிலைகள் உருவாகிறது. ஒரு அடி முதல் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள், 150 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தத் தொழிலில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். சிலையின் உயரத்தைப் பொறுத்து, அதை தயாரிக்க, 2 நாள் முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளை, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு, நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வாங்கிச் செல்கின்றனர்.
மர விதைகள் கொண்டு தயாரான இந்த சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்கும்போது, நீர்நிலைகளில் விதைகள் தேங்கி, மரங்களாக வளர வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாமல், பாதுகாக்கும் நிலை ஏற்படும் என்கின்றனர் தொழிலாளர்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் விநாயகர் சிலைகள், வேதிப்பொருட்களால் தயார் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யபடுவதாகவும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதுடன், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும், மர விதைகளால் உருவான விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post