மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகளை, விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில், 51 வாக்குகள் மட்டும் பொருந்தாமல் இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லை என்றும், வாக்குச்சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் எண்ண வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதிவான ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகள், விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இவற்றில் 51 வாக்குகள் மட்டுமே பொருந்தாமல் இருந்ததாகவும், மற்ற அனைத்து வாக்குகளும் ஒப்புகைச் சீட்டுடன் பொருந்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொருந்தாத வாக்குகள் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Discussion about this post