மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள அரிய வகை பவளப்பாறைகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்து வருவதற்காக எர்த் ஹீரோ விருதுக்கு தேர்வாகியுள்ளார் வனச்சரக அலுவலர் ஒருவர். அதுபற்றி இந்த செய்திதொகுப்பில் பார்க்கலாம்.
தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்தியாவின் மன்னார் வளைகுடாவில், கடல்களின் மழைக்காடுகள் என அழைக்கப்படும் பவளப்பாறை தொகுப்புகள் பெருமளவில் காணப்படுகிறது. உலக நாடுகளில் மொத்தம் 700 வகையான பவளப் பாறைகள் இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 200 வகையான பவளப் பாறைகள் காணப்படுகின்றன. ஏறத்தாழ 4 ஆயிரம் வகையான கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் இந்த பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா, அந்தமான் நிகோபார் மற்றும் இலட்சத் தீவு கடற்பகுதியில் அதிகமாக இருக்கின்றன. இத்தகைய சிறப்புகளை கொண்ட பவழப்பாறைகள், கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவது, பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது, கார் பைக் தயாரிப்புக்காக பவளப் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பது போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.
பவளப்பாறைகைளின் அழிவால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், 4 ஆயிரம் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் அழியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் பவளப்பாறைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக “எர்த் ஹீரோஸ்” எனும் விருது இவரை தேடி வந்திருக்கிறது.
மராட்டியத்தைச் சேர்ந்த RBS FOUNDATION என்ற அமைப்பு நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் வன அலுவலர்களை தேர்வு செய்து இந்த விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான “எர்த் ஹீரோஸ்”விருதுக்கு சதீஷ் தேர்வாகி இருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு ராமநாதபுரம் வனச்சரகராக பொறுப்பேற்ற இவர், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக உருவெடுத்திருக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தேடித்தேடி அகற்றி வருகிறார். மேலும் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் கோட்டத்துக்கு உட்பட்ட மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படும் அரிய வகை கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமைகள், பவளப்பாறைகள் உள்ளிடவைகளை சட்டவிரோதமாக கடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்துள்ளார். அதுமட்டுல்லாமல் ஆமைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் சதீஷ்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள கடல் வாழ் உயிரினங்களை காக்கும் பொருட்டு சேவையாற்றும், சதீஷ் எர்த் ஹீரோ விருதுக்கு தேர்வாகி, தான் பிறந்த தாளவாடி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த விருதை பெற்று தாளவாடிக்கு சதீஷ் வரும் போது, மிகப்பெரிய வரவேற்பை அளிக்க தாளவாடி பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் காத்து கொண்டிருக்கின்றனர்..
Discussion about this post