வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், கிண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post