ஜி-20 மாநாட்டிற்கு பிறகு இவாங்கா டிரம்ப் அளித்த பேட்டியின் மூலம், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொல்லி உள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்னையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, டிரம்ப் உடனான சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட பேசவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.
ஈரான் விவகாரம், இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசியதாக இந்தியா விளக்கம் தந்தது. இதனிடையே, ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில், மோடி – டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரம்ப்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மோடி – டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்றும், ஈரான் விவகாரம், தேசிய பாதுகாப்பு, 5ஜி தொழில்நுட்பம் தொடர்பாக இருதலைவர்களும் பேசியதாக இவாங்கா கூறினார். இவாங்கா டிரம்ப்பின் பேட்டி மூலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொல்லி உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Discussion about this post