நிலவின் நிலங்களுக்கும், வானில் உள்ள பிற கோள்களுக்கும் உரிமை கொண்டாடும் போக்கு, உலக நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. இந்த அதிகாரப் போட்டியால் ‘வான்வெளியில் ஒரு உலகப் போர் தோன்றலாம்’ என்றும் அஞ்சப்படுகிறது.
சந்திரயானின் வெற்றிக்குப் பின்னர், வான்வெளி ஆதிக்கப் பந்தயத்தில் இந்தியாவுக்கும் இடம் உள்ளது என்பதால், நாம் இதனை அறிய வேண்டியது அவசியம். என்ன நடக்கிறது வானத்தில்? அறிவுக் கண்களால் அண்ணார்ந்து பார்ப்போம் இந்த
சிறப்புத் தொகுப்பில்…
மனிதன் நிலவில் கால்வைத்ததாக அமெரிக்கா அறிவித்து இத்தோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகெங்கும் நிலவு தொடர்பான ஆய்வுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ‘நிலவு யாருக்கு சொந்தம்?’ என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பானது.
நிலவு யாருக்கு சொந்தம் என்ற கேள்வி – நிலாவில் மனிதன் கால் வைப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பாகவே எழுந்த ஒன்று. இதனால் 1967ல் ஓ.எஸ்.டி. எனப்படும் சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி விண்வெளியில் உள்ள நிலவும், பிற கோள்களும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை. எந்த நாடும் நிலவுக்கு முழுவதுமாக சொந்தம் கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பின்னர் நிலவில் ஆய்வுகள் தொடர்ந்தன.
இந்நிலையில், நிலவு குறித்த ஆய்வுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுவதைக் கண்ட 20 உலகநாடுகள் சேர்ந்து, ‘நிலவு ஒப்பந்தம்’ என்ற புதிய ஒப்பந்தத்தை 1979ல் உருவாக்கின. ‘அனைத்து நாடுகளும் இணைந்து நிலவில் ஒரு ஆய்வு அமைப்பை தொடங்கலாம், நிலவில் உள்ள வளங்களை அனைவரும் பயன்படுத்தலாம்’ என்ற எண்ணத்தை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏற்கவில்லை!. மற்ற நாடுகளுக்கும் இந்த இரு நாடுகளையும் பணிய வைக்கும் ஆற்றல் இல்லை. அதனால் உலக நாடுகள் பின்னர் நிலவு பற்றி அதிகம் பேசவில்லை.
இந்நிலையில், நிலவின் மறுபக்கத்தில் சீனா தனது விண்கலத்தை இறக்கிய போது, நிலவின் எந்தப் பகுதி யாருக்கு? – என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. பின்னர் 2008ல் சந்திரயான் விண்கலம் நிலவில் நீரின் வாய்ப்பைக் கண்டறிந்த போது, இந்த கேள்வி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
இப்போது நிலவின் நிலம் மிக முக்கியமானது. ஏனெனில், செவ்வாய் கோளில் ஆய்வு செய்ய விரும்பும் நாடுகள், அதற்கான நிலையத்தை நிலவில்தான் அமைக்க முடியும், நிலவில் தண்ணீர் உள்ளதை சந்திராயன்-2 உறுதி செய்தால், அந்த நீரைக் கொண்டு பயணிக்கும் விண்கலங்கள் உருவாக்கப்படும். மேலும் நிலவில் இருப்பதாகக் கருதப்படும் ஹீலியம் 3 என்ற ஐசோடோப்பு அணுசக்திக்குப் பயன்படக் கூடியது, இதுவும் விண்கலங்களை இயக்கப் பயன்படுத்தப்படும். இவை தவிர வேறு பல முக்கிய
தாதுக்களும் கூட நிலவில் கிடைக்கலாம்.
நிலவின் நீர், ஹீலியம் 3, தாதுக்கள், நிலவின் எல்லாப் பகுதியிலும் கிடைக்காது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தால் அந்த இடத்துக்கு அனைத்து நாடுகளும் உரிமை கொண்டாடும். நிலவுக்கு முதலில் கலனை அனுப்பிய ரஷ்யா, நிலவுக்கு முதலில் மனிதனை அனுப்பிய அமெரிக்கா, நிலவின் மறுபக்கத்தை முதன்முதலில் கண்டறிந்த சீனா, நிலவின் நீரின் வாய்ப்பை முதன்முதலில் கண்டறிந்த இந்தியா ஆகியவை இடையே இது விண்வெளிப் போட்டிக்கோ, போருக்கோ காரணமாகலாம்!.
இன்னொரு பக்கம் சில தனியார் நிறுவனங்கள், ‘செவ்வாயில் நிலம் வாங்கித் தருகிறோம், நிலாவில் பட்டா போட்டுத் தருகிறோம்’ – என்று ஏற்கனவே வர்த்தகம் செய்து வருகின்றன. 1967 ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் ‘அனைத்து மனிதர்களுக்கும் வானம் பொது’ என்று சொல்வதைக் மையமாகக் கொண்டே இந்த வர்த்தகம் நடக்கிறது. இதனால் சில வசதிமிக்க மனிதர்களும் இந்த விண்வெளிப் போட்டியில் பங்கேற்பார்கள்.
இவை அனைத்திற்கும் மேலாக டெஸ்லா, கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களும் நிலவில் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. அவையும் நிலவில் நிலத்திற்காகப் போட்டியிடும். இவற்றால் நிலவிலும் எல்லைக் கற்கள், சாலைகள் எதிர்காலத்தில் உருவாகலாம். அத்தோடு மனிதர்கள் சிறிய சிறிய விண்கற்களையும், கோள்களையும் கூட வாங்கலாம். இது எதற்கும் தற்போதுள்ள விண்வெளிச் சட்டத்தைக் கொண்டு நாம் தடைபோட முடியாத நிலை உள்ளது.
இந்த சூழலால் எதிர்கால பிரச்னைகள் அனைத்தும் மண்ணில் இருந்து விண்ணுக்கு இடம் பெயர உள்ளன. இதனால், நிலவும் கூட நாளைக்கு மாசுபடலாம், உலகம் போரால் அழிக்கவும் படலாம் என்று அஞ்சப்படுகிறது.
அறிவியலின் நோக்கம் எப்போதும் வளர்ச்சி என்றுதான் கூறப்படுகிறது. ஆனால் மனிதனின் பேராசை அறிவியலை எந்த திசையில் செலுத்தும் என்பது கணிக்க முடியாதது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்தும், ஆக்க சக்திக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அணு ஆற்றலும் கடைசியில் சக மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன என்பதே நம் கண்ட வரலாறு. ஒருவேளை விண்வெளி குறித்த சட்டங்கள் விரைவில் விரிவாக்கப்பட்டு, வானம் ஆய்வுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புக்கு அல்ல என்பது நிறுவப்பட்டால், உலகம் அமைதியை அடையும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.
Discussion about this post