டிக் டாக் மற்றும் ஹலோ சமூக வலைதளங்கள், தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக, புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றை வெளியிடும், ‘பைட் டான்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் வாடிக்கையாளர் குறித்த தகவல் மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்டை நாடான, சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், டிக் டாக் மற்றும் ஹலோ போன்ற சமூக வலைதள செயலிகள் செயல்படுகின்றன. இந்த செயலியில், ஒருவர் பாடல் அல்லது வசனத்துக்கு ஏற்ப நடித்து, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யலாம்.
‘ஆனால், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் இந்த செயலி உள்ளதால், அதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என, ஏப்ரலில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இந்த செயலி மூலம், அதை பயன்படுத்தும் இந்தியர்கள் குறித்த தகவல்களை, சீனா சேகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ‘தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதால், இந்த செயலிகளுக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு, மத்திய அரசு, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
Discussion about this post