கர்நாடக சட்டப்பேரவையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 1 ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் பதவியை ராஜினாமா செய்தது முதல், அரசியல் குழப்பம் துவங்கியது. தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால், கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பான்மையை இழந்த முதல்வர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்.
சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் இருமுறை கெடு விதித்தார். அதை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்தது. இந்தநிலையில், நாளை மீண்டும் கூடும் பேரவையில், முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் ஷங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ஜூலை 22 ஆம் தேதி காலை 6 மணி முதல், ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு வரை விதான் செளதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பகுதிகளில் 144 உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. உத்தரவை மீறும் விதமாக 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூடக் கூடாது. உருவ பொம்மைகளை எரிக்க கூடாது. முழக்கங்கள் எழுப்புவது, குறியீடுகளை காட்டுவது, பாடுவது, இசைப்பது போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post