குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டசபையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஆளும் கூட்டணியினர் நேரத்தை வீணடிப்பதாக பாஜகவினர் ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் ஆளும் கட்சி எதிர் கட்சிக்கிடையே அமளி ஏற்பட்டதால், அதனை காரணம் தெரிவித்து சபாநாயகர் கர்நாடக சட்டப்பேரவையை இன்று ஒத்திவைத்தார். இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கினர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.
Discussion about this post