இன்றைக்கு உணவு விடுதிகளில் ஒருவேளைக்கான தரமான உணவு உண்ண வேண்டுமென்றால் குறைந்தது 150 ரூபாய் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 5 ரூபாய்க்கு ஒருவர் தரமான உணவை வழங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறார் கணேசன்… யார் இந்த கணேசன் ? இவர் ஏன் 5 ரூபாய்க்கு உணவை வழங்க வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஸ்ரீ லஷ்மி டிபன் செண்டர் இது… மதிய உணவு தயாரிக்கும் வேலையில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார் கணேசன். இன்னும் கொஞ்ச நேரத்தில் விடுதி களைகட்டி விடும். வரும் அனைவருக்கும் இல்லை என்று கூறாமல் உணவை வழங்கிவிட வேண்டும் என ஆர்வம் கணேசனிடத்தில் ரொம்பவே இருக்கிறது. ஏன் என்றால் மிக விரைவாக தீர்ந்து போகும் என்பது அவருக்கு தெரியும். காரணம் உணவின் விலை…. ஆம் வெறும் 5 ரூபாய்க்கு உணவு வழங்குகிறார் கணேசன்… ஆச்சரியமாக இருக்கிறது கணேசனை கண்டால்….சற்று நேரம் நாம் ஒதுங்கியிருதோம்… கடையில் வியாபாரம் எப்படி இருக்கிறது? என்பதை அருகில் இருந்து கவனித்தோம்….
பணம் வைத்திருக்கும் சிலருக்கு உணவு என்பது எளிதில் கிடைக்கும்.ஆனால் ஒரு வேளை கூட உணவு கிடைக்காதா என சிலர் ஏங்வதும் உண்டு… இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் உணவு உண்ண வேண்டும், உணவில்லாதவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வருகிறார் கணேசன்… அதுவும் 25 ஆண்டுகளை கடந்து இந்த சேவையை செய்து வருகிறார் என்பது தான் நம்ப முடியாத உண்மை….
கணேசனுக்கு உதவியாக அவரது மகன் ராஜு இருந்து வருகிறார். காலை 4 மணி முதலே சமையலுக்கான வேலைகளை துவங்கி விடுவதாக கூறுகிறார் ராஜூ. ராஜூ, தனியாக ஒரு உணவகத்தை நடத்தி வந்தாலும் அப்பாவிற்கு உதவியாக இருப்பதில் தான் உண்மையான பெருமை என்கிறார்
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் முழு திருப்தியோடு செல்வதை பார்க்க முடிகிறது. வருடக்கணக்காக இவரிடம் வாடிக்கையாளராக பல தரப்பட்ட மக்களும் இருந்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் முதல் ஐடி துறையினர் வரை இங்கு வந்து உணவு உண்கின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுகின்றனர். சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மிகவும் குறைந்த விலையில் உணவு கிடைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கணேசனுக்கு இன்று 65 வயது ஆகிறது. என்னால் முடியும் வரை இந்த உணவு சேவையினை தொடர இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகிறார் கணேசன். சாமானிய மக்களுக்காக 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் இவரின் சேவை முடிவின்றி தொடர வேண்டும் என்றுதான் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
Discussion about this post