60 இடங்களில் கொள்ளையடித்து பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ராயப்பேட்டையில் கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 38 வயது மதிக்க தக்க மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார். இது குறித்து ராயப்பேட்டை காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை பறிசோதித்ததில் கொள்ளையன் இருச்சக்கர வாகனத்தில் செங்கல்பட்டு மார்கமாக பாண்டிச்சேரி சென்றது தெரிய வந்தது.
இதற்காக 160 கிலோ மீட்டர் தொலைவில் 60 சிசிடிவி கேமராக்கள் பரிசோதனைக்கு உள்ளாகப்பட்டது. அதில் பாண்டிச்சேரி, இராஜிவ் காந்தி சாலை அருகே கொள்ளையன் மறைந்துள்ளான். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான புகைப்படம் பாண்டிச்சேரி போலீசாரிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியில் மர்மநபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார்.
சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சென்று பார்த்தபோது, ராயப்பேட்டையில் கொள்ளையடித்த கொள்ளையன் தான் என தெரிய வந்தது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்பதும், சென்னையில் பல இடங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
Discussion about this post