பாம்பன் கடல் பகுதியில் இரண்டு நாட்களாக தரைதட்டி நிற்கும் 150 அடி நீளமுள்ள சரக்கு கப்பலால், நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் தூக்குப்பாலம் வழியாக தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கும், வடக்கு பாக் ஜலசந்தி பகுதிக்கும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. கப்பல்கள் தூக்குப் பாலத்தை கடப்பதற்கு முன்பு பாம்பனில் உள்ள துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை இருந்தது.
தற்போது, தூக்குப்பாலம் பழமையடைந்துள்ளதால் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் இருந்து, காக்கி நாடா செல்வதற்காக 150 அடி நீளமுள்ள சாந்தி சாகர் என்ற சரக்கு கப்பல், நங்கூரமிட்டு காத்திருந்தது. கடற்பகுதியில் காற்று அதிகமாக இருந்ததால் கப்பல் அடித்து வரப்பட்டு தரை தட்டி நின்றது.
இதனால் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தரை தட்டியுள்ள கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post