மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்வி ட்ராஃப்போர்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து தடுமாறி வரும் கப்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து நிகோல்ஸ் 28 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 16 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 46.1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்தது.
மழையின் தாக்கம் அதிகரித்ததால், 23 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரோஹித், கோஹ்லி, ராகுல் ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இறுதியில் இந்திய அணி 49.3 ஒவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதனால் இந்திய அணி உலககோப்பையை வெல்லும் என்ற ரசிகர்களின் கனவு தகர்ந்தது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்க இருக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, வரும் 14ந் தேதி நடக்க இருக்கும் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இறுதிபோட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
Discussion about this post