பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முகிலன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் நாள் சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் மாயமான முகிலன் 141 நாட்களுக்கு பிறகு ஆந்திர ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாமக்கல்லை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் முகிலனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், முகிலன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முகிலனை கரூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர் மீதான பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post