வடமாநிலங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வல்சத் மாவட்டத்தில் தொடர் மழையால் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.
தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் முடங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயில்கள், வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதேபோல், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கி அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதேபோல், சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் நகரில் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது தரைபாலத்தை கடந்து செல்ல முயன்ற கார், வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது.
Discussion about this post